“
ரோட்டரி கிளப்பில், எல்வின் பேசினார்
"இந்தியாவில் வறுமை நமக்குப் பழக்கப்பட்டுவிட்டது. அதனாலேயே அது என்னவென்று நாம் மறந்து போகிறோம். ஒருநாள் நடந்த நிகழச்சியை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு குடும்பம் கண்ணீருடன் எங்களிடம் வந்தது. அவர்களுடைய குடிசை தீயில் எரிந்துவிட்டது. அவர்களிடமிருந்த எல்லாப் பொருட்களும் தீக்கிரையாகிவிட்டன. மீண்டும் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப எவ்வளவு பணம் தேவை என்று கேட்டேன். 'நான்கு ரூபாய்கள்' என்று சொன்னார்கள். 'ப்ரேவ் நியு வேர்ல்ட்' நாவலின் ஒரு பிரதியின் விலை நான்கு ரூபாய்.
அதுதான் வறுமை.
ஒரு தடவை, பஸ்தார் மாநிலத்தில், மரண தண்டணை விதிக்கப்பட்ட ஒரு மரியாவிடம், அவனைத் தூக்கிலிடும் முன்னால் "உன் கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்கள். நகரத்துப் பாணியில் செய்யப்பட்ட சில சப்பாத்திகளும், மீன் குழம்பும் வேண்டும் என்று கேட்டான். அவனுக்கு அதைக் கொடுத்தார்கள், அதில் பாதியை அவன் மிகவும் அனுபவித்துச் சாப்பிட்டான். மீதம் உள்ளதை ஒரு இலையில் சுருட்டி, ஜெயிலரிடம் கொடுத்து, "எனது மகன் சிறைக் கதவுக்கு அந்தப்புறம் காத்திருக்கிறான், அவன் இதுநாள்வரை இப்படிச் சுவையான உணவைச் சாப்பிட்டதில்லை. அவன் இப்போதாவது இதைச் சாப்பிடட்டும்" என்று சொன்னான்.
அதுதான் வறுமை.
உங்கள் சின்னக் குழந்தைகளை அழகின் வடிவமாக இருக்கும் வயதில் சாகக் கொடுப்பது வறுமை. உங்கள் மனைவி சீக்கிரம் கிழவியாகிப் போவதையும், வாழ்க்கையின் பாரம் தாங்காமல் உங்கள் அம்மாவின் முதுகில் கூன் விழுவதைக் காண்பதும்தான் வறுமை. அகங்காரம் பிடித்த அதிகாரியின் முன்னால் பாதுகாப்பின்றி நிற்பது, சுரண்டல்காரர்கள், ஏய்ப்பவர்கள் முன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் நிற்பது, அதுதான் வறுமை. நீதிமன்றத்தின் வாசலில் பலமணிநேரம் காத்திருந்தும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவது, அதிகார வர்க்கம் செவிடாக, பெரியவர்களும் வசதி படைத்தவர்களும் குருடாக இருப்பதைக் காண்பது, அதுதான் வறுமை.
எப்போதாவது கிடைக்கும் தீயில் சுட்ட எலிக்காகக் குழந்தைகள் சண்டையிடுவதைப் பார்த்திருக்கிறேன். வயதான பெண்கள், விசிறிப் பனைமரத்தின் தண்டுப் பாகத்தை, களைப்புடன் இடித்து மாவாக்குவதைப் பார்த்திருக்கிறேன். ஆண்கள் மரங்களின் மீது ஏறி, செவ்வெறும்புகளைப் பிடித்து, மிளகாய்க்குப் பதிலாக உண்பதைக் கவனித்திருக்கிறேன்.
பட்டினி, அவநம்பிக்கை, சொந்தங்களை இழப்பது, எதுவும் பயனில்லை என்று உணர்வது. அதுதான் வறுமை. அது ஒன்றும் அழகானதில்லை.
”
”